by Gwee Li Sui
சார்ல்ஸ்: ம்... ஊழ்வினை... [திடீரென்று] ஐயா!.. என்னைத் தூக்கிலிடும்போது, நீங்களும் உடனிருப்பீர்களா?
சிறையதிகாரி: இருப்பேன்... ஏன் கேட்கிறாய்?..
சார்ல்ஸ் [மனம் நைந்து]: இல்லை... தூக்குக்கயிறு என் கழுத்தை நெரிக்கும்போது... இங்கும் எனக்குப் பழக்கப்பட்ட ஒருவர் இருக்கிறார் என்கிற எண்ணத்தில்... என் வலியை மறந்து சாவேன்...
சிறையதிகாரி [மிகுந்த இரக்க உணர்வுடன்]: சார்ல்ஸ்... உன்னை நினைத்தால்... எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது..
சார்ல்ஸ் [விம்முதல்]: ஊழ் என்றீர்களே.. அதுவாகக்கூட இருக்கலாம். இருந்தாலும், நான் அன்று செய்த அந்தக் கொலைக்காக அன்றும் வருந்தியதில்லை; இன்றும் வருந்தவில்லை... என் பெற்றோர் என்னிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தனர். ஆனால்… அவர்கள் விருப்பம் எதையும் நிறைவேற்ற இயலாமல் போகிறேனே என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்போது அவர்களும் இல்லை. என் தங்கையும் இல்லை. ம்.. இந்த உடம்புடன் இந்தச் சிறையிலிருந்து வெளியேறும் விடுதலை கிடைக்கவில்லை என்றாலும், உயிருக்கு விடுதலை கிடைத்துவிடும்... அந்த விடுதலைக்காகத்தான் இப்போது காத்திருக்கிறேன்...
சிறையதிகாரி: ம்... சிறையதிகாரி என்ற முறையில் இன்றும் நான் ஒரு வேதனைமிக்க சாவைக் காணப்போகிறேன்...
சார்ல்ஸ்: ம்... வேதனைச் சாவு!.. சாவே வேதனையானதுதான்... ஐயா... இயற்கைச் சாவு என்கிறார்களே... அதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?...
சிறையதிகாரி: ஆமாம்!..
சார்ல்ஸ்: இயற்கைச் சாவென்பது என்ன? எவ்விதத் துன்பமும் வேதனையும் இல்லாமல் இயல்பாகச் சாவதாம்!.. அந்த இயற்கையான சாவில் மட்டும் துன்பம் இல்லையா? ஆவி பிரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் சாகப் போகிறவன் எத்தகைய வேதனையை அனுபவித்துக்கொண்டிருப்பான் என்பதை யார் அறிவார்?... சாகப்போகிறவன் வேதனையை, அவனைச் சூழ்ந்துகொண்டிருப்போர் அறிவார்களா?.. அவன் புன்னகையுடன் செத்தாலும் அந்தப் புன்னகையிலும் வேதனை உறைந்திருக்கும் என்பதுதான் உண்மை... சாவு எந்தவகைச் சாவாக இருந்தாலும் அது துன்பந் தருவதுதான்... வேதனை தருவதுதான்!...
சிறையதிகாரி [இரங்கி]: சார்ல்ஸ்... நீ ஆசிரியனாகப் பணியாற்றியவன். அதனால், சாவின் தன்மையை வேதனையின் வெளிப்பாடாய்ப் புலப்படுத்துகிறாய்... எஞ்சியிருக்கும் இந்த இரண்டொரு மணி நேரத்திலாவது நீ மரணத்தை மறந்திருக்க முயற்சி செய்...
சார்ல்ஸ்: எப்படி மறப்பது?.. மணி... நிமிடம்... விநாடி... பிறகு எல்லாம் தாமாகவே மறைந்துவிடும்...
சிறையதிகாரி: ம்... இன்னும் சிறிது நேரத்தில் பாதிரியார் உன்னைப் பார்க்க வருவார். நான் அவரை அழைத்து வருகிறேன்...
சார்ல்ஸ்: என் கதையை நான் அவரிடம் கடைசி முறையாகக் கூறப்போகிறேன்... சாவதற்குமுன் அவர் கூறும் புனித மொழிகளைக் கேட்டுவிட்டுச் சாகலாம்...
சிறையதிகாரி: சரி... இப்போது உண்பதற்கு ஏதாவது வேண்டுமா?.
சார்ல்ஸ்: ம்... சாகும் உயிருக்குச் சாப்பாடு எதற்கு? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்...
சிறையதிகாரி: சரி...
சிறையதிகாரி புறப்படுகிறார்; கதவு மூடப்படுகிறது.
சார்ல்ஸ் [தனக்குள்]: ம்... பிறக்கும்போது என்ன உணர்வில் பிறக்கிறோம்? என்று சொல்லத்தெரியாமல் அழுதுகொண்டே பிறக்கும் மனிதன், இறக்கும்போது உணர்வுகளையெல்லாம் சொல்லத் தெரிந்தும் அவற்றைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு சாகிறான்... இவற்றுள் எது சிறந்தது? பிறப்பா? இறப்பா?..
அவன் நீண்ட பெருமூச்சுடன் படுக்கையில் சாய்கிறான்.
காட்சி: 2
தன்னைத் தூக்கிலிடும் நேரம் நெருங்கிவிட்டது என்னும் உணர்வில் சார்ல்ஸ், கண்களை மூடியவாறு படுத்திருக்கிறான். பாதிரியாரை அழைத்து வரும் சிறையதிகாரி, சார்ல்ஸ் இருக்கும் சிறைக்கதவைத் திறக்கிறார்.
சிறையதிகாரி: சார்ல்ஸ்... சார்ல்ஸ்...
சார்ல்ஸ் [படுக்கையிலிருந்து எழுந்தவாறு]: வணக்கம்...
சிறையதிகாரி: சார்ல்ஸ்... பாதிரியாரை அழைத்து வந்திருக்கிறேன்...
சார்ல்ஸ்: வணக்கம்... தந்தையே...
பாதிரியார்: பரமபிதாவின் கருணை உனக்குக் கிட�
�க்கட்டும்.
சிறையதிகாரி: தந்தையே... நான் பிறகு வருகிறேன்... நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்...
சிறையதிகாரி புறப்படுகிறார்.
பாதிரியார்: உட்கார் சார்ல்ஸ்...
சார்ல்ஸ்: என் இறுதி நேரத்தில்... நீங்கள் என்னைக் காண வந்ததற்கு நன்றி, தந்தையே...
பாதிரியார்: சார்ல்ஸ்… இந்த நேரத்தில்... நீ என்னிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?
சார்ல்ஸ்: எதைச் சொல்வேன்?.. என் கதை எல்லாருக்கும் ஓரளவு தெரிந்ததுதான்... இருந்தாலும்... பாவமன்னிப்பு வேண்டி இறுதியில் பரலோகம் செல்லவிருக்கும் நான் உங்களிடம் என் கதையைக் கடைசியாகக் கூறிவிட்டுத் தூக்குமேடை ஏற விரும்புகிறேன்... அது சிறிது நேரத்திற்காவது என் நெஞ்சத்தின் வேதனையைக் குறைக்கும். நான்... நான் ஏன் அந்தச் செயலைச் செய்தேன்? [கலங்கி.] ஏன் செய்தேன்?
பாதிரியார்: சார்ல்ஸ்...
சார்ல்ஸ்: புனிதக் கட்டளைகளுள் ஒன்றான அந்தக் கட்டளைக்குப் புறம்பாக நான் அந்தக் கொடிய செயலைச் செய்தேன்!... ஏன் செய்தேன்?... அதுதான் நீதி என்ற எண்ணத்தில் செய்தேன்... அதற்காகக் கர்த்தர் என்னை மன்னிக்கட்டும்.
பாதிரியார்: கர்த்தர் உன்னை மன்னிப்பார், சார்ல்ஸ்... நம்முள் பலர் பாவம் செய்கிறோம் என்பதை நன்கு உணர்ந்தும், எப்படியோ அதை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கிறோம்... ஆனால்... இறுதியில்... செய்த பாவங்களுக்காக வருந்தி... அந்தப் பரமபிதாவின் மன்னிப்பைக் கோருபவனே மனிதன்!.. அத்தகைய மனிதனுக்குத் தேவனின் மன்னிப்பு என்றும் உண்டு.
சார்ல்ஸ்: நெறியற்ற அந்தக் கொடியவனைக் கொல்வதே நீதி என்று கருதி அவனைக் கொன்றேன்... அது பாவம்தான்... எடுப்பதற்குரிய உரிமை கொடுத்தவனுக்குதான் உண்டு; எனக்கில்லை...
பாதிரியார்: சார்ல்ஸ்... அறம் போதிக்கும் ஆசிரியனான நீ அந்தக் கொலையைத் தவிர்த்திருக்கக் கூடாதா?
சார்ல்ஸ்: மனிதப்பண்பைக் குழிதோண்டிப் புதைத்துவிட்ட அந்த மனித மிருகத்தை நான் கொன்றதும் ஓர் அறந்தான். வாழக்கூடாத - வேண்டாத பிறவிகள் உயிருடன் நடமாடுவதே உலகுக்குக் கேடு என்றே அப்போது நான் உறுதியாய் நம்பினேன்... ம்... ஜப்பானியப் படையெப்பு மட்டும் இல்லாதிருந்திருந்தால்... ஒருவேளை... நான் அவனைக் கொல்லாமலும் விட்டிருக்கலாம்... ஜப்பானியரின் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தபோது, அவன் தன் சுயநலத்திற்காக என் குடும்பத்தையே அழித்துவிட்டான்!.. என் குடும்பத்தையே அழித்துவிட்டான்!..
அவன் ஜப்பானியார் படையெடுப்பை நினைவுகூர்கிறான்.
காட்சி: 3
[பின்னோட்டக் காட்சி]
ஜப்பானியர்கள் விமானங்களிலிருந்து குண்டுகளைப் பொழிகின்றனர். அபாய அறிவிப்புச் சங்கொலி தொடர்ந்து ஒலிக்கிறது. மக்கள் அலறியவாறே பதுங்கும் பாதுகாப்பு இடங்களை நோக்கி ஓடுகின்றனர்.
அந்தோணி [பரபரப்புடன்]: ஞானம்! குண்டு வீச்சு மறுபடியும் ஆரம்பித்துவிட்டது. இனியும் நாம் இங்கே இருக்கக்கூடாது. இப்போதே பாதுகாப்பு நிலவறைக்குப் போய்விட வேண்டும் ம்... சீக்கிரம்...
ஞானம்: வெளியில் போன சார்ல்ஸ் இன்னும் வரவில்லையே! அவன் இப்போது எங்கே இருப்பான் என்றே தெரியவில்லையே, அவன் இல்லாமல் நாம் மட்டும் எப்படிப் போவது?
அந்தோணி: எல்லா இடங்களிலும்தான் இந்த மாதிரிப் போர்க்காலத்திற்காகப் பாதுகாப்புப் பதுங்கு குழிகள் அமைத்து வைத்திருக்கிறார்கள்... அவன் அப்படிப்பட்ட இடங்களில் ஏதாவது ஒன்றில் பாதுகாப்பாக இருப்பான்... ம்... புறப்படு.
ரீட்டா: அண்ணன் அங்கேயெல்லாம் போகாமல் நேரே இங்கே வந்துகொண்டிருந்தால்?..
ஞானம்: ஆமாம்!.. சிறிது நேரம் இருந்து பார்க்கலாமே...
அந்தோணி: நீ என்ன பேச்சுப் பேசுகிறாய்? இந்தக் குண்டு வீச்சில் நாம் எப்படி இந்த வீட்டில் இருக்க முடியும்? அந்தப் பாதுகாப்புக் குழிகள் சற்றுத் தொலைவில் இருக்கின்றன. இப்போதே நாம் போகாவிட்டால் குண்டுகள் இங்கே விழுந்தாலும் விழும்!.. வா, சீக்கிரம்...
ரீட்டா: அப்பா... வியாபாரம் தொடர்பான பத்திரங்களையும் மற்ற முக்கியமான பொருள்களையும் எடுத்து வரவா?
அந்தோணி [விரைவுபடுத்
தி]: அவற்றை எடுப்பதற்கெல்லாம் இப்போது நேரமில்லை... ம்! புறப்படுங்கள்!..
அவர்கள் பாதுகாப்பு நிலவறை அமைந்திருக்கும் இடத்தை நோக்கி ஓடுகின்றனர். அவர்களைப் போலவே மற்றவர்களும் அந்த இடத்திற்கு ஓடி வருகின்றனர்.
ரீட்டா: அப்பா!.. அந்தப் பாதுகாப்புக்குழி, இப்போதே கூட்டத்தால் நிறைந்துவிட்டதைப் போலிருக்கிறது... அங்கே பாருங்கள்!
ஞானம்: நமக்கு அங்கே இடம் கிடைக்கிறதோ இல்லையோ!
அந்தோணி: இடம் இருக்கும். சீக்கிரம் வாருங்கள்...
அவர்கள் விரைந்து ஓடுகின்றனர்.
ரீட்டா: அம்மா!.. சீக்கிரம் வாருங்கள்...
ஞானம்: உன்னைப்போல நான் எப்படி ஓடுவேன்?. நீங்கள் முதலில் செல்லுங்கள்....
அந்தோணி: ரீட்டா!.. நீ முதலில் போ… நான் உன் அம்மாவை அழைத்து வருகிறேன்...