by Gwee Li Sui
அந்தோணி: பயப்படாதே, ஞானம்… நீயும் ரீட்டாவும் அவர்கள் சந்தேகப்படும்படி நடந்துகொள்ளாமல் தைரியமாக இருங்கள்…
அந்தோணி சென்று கதவைத் திறக்கிறார்.
டேவிட் [கிண்டலாக]: என்ன, பெரியவரே… நலமா?
அந்தோணி [வெறுப்புடன்]: எதற்காக இவர்களை அழைத்து வந்திருக்கிறாய்?
டேவிட்: உமது மகள் ரீட்டா அழகான பெண்!...
அந்தோணி: நீ என் மகளைப்பற்றிப் பேசத்தான் இங்கே வந்திருக்கிறாயா?
டேவிட்: இல்லை… அவள் என் கண் முன்னே நிற்கிறாள். அதனால், இந்த இடத்தில் அவளைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் சொல்லாவிட்டால் நன்றாக இருக்காது என்பதற்காகச் சொன்னேன்… உண்மையாகச் சொன்னால், உம் மகள் உண்மையிலேயே அழகிதான்!
அந்தோணி: ரீட்டா, நீ உள்ளே போம்மா….
ரீட்டா தன் அறைக்குச் செல்கிறாள்.
டேவிட் [கடுமையாக]: அந்த ஆள் எங்கே?
அந்தோணி: எந்த ஆள்?
டேவிட்: நீர் மறைந்து வைத்திருக்கும் அந்த வெள்ளையன்.
அந்தோணி: நீ… என்ன சொல்கிறாய்?
டேவிட்: தெரியாததுபோல் நடிக்காதீர்! ஜப்பானியர்களின் ஒற்றர் இலாகாவைத் தவறாக எடைபோட வேண்டாம்! அந்த ஆளை எங்கே மறைத்து வைத்திருக்கிறீர்?
அந்தோணி: நீ யாரைச் சொல்கிறாய் என்றே தெரியவில்லை!
டேவிட்: பாசாங்கு செய்ய வேண்டாம்! உமது வியாபார நண்பரைத்தான் சொல்கிறேன். எந்தச் சரக்குக் கிடங்கில் மறைத்து வைத்திருக்கிறீர்?
அந்தோணி: நான் எவரையும் எந்த இடத்திலும் மறைக்கவில்லை.
டேவிட்: இப்படிப்பட்ட அரசாங்க விரோதச் செயலுக்கு என்ன தண்டனை தெரியுமா?
ஞானம்: அவர்தான் யாரையும் மறைத்துவைக்கவில்லையென்று சொல்கிறாரே!.. பிறகு ஏன் அவரைத் தொல்லை செய்கிறீர்கள்?
அந்தோணி: ஞானம், நீ பேசாமலிரு!..
டேவிட் [கடுமையுடன்]: அந்தோணி!.. இப்போது நான் என் கண்ணை அசைத்தால் போதும். நீங்கள் எல்லோருமே இவர்களின் துப்பாக்கிக்குண்டுகளுக்கு இரையாகிவிடுவீர்கள்! மறுபடியும் ஒரு வாய்ப்புத் தருகிறேன்! அந்த ஆள் எங்கே?
அந்தோணி: எனக்குத் தெரியாததைத் திரும்பத்திரும்பக் கேட்டால் என்னால் என்ன செய்ய முடியும்? அவர் எங்கே இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது!
டேவிட்: ம்… அந்தோணி!.. ஏதோ ஒருவகையில் நீர் எனக்குத் தெரிந்தவர் என்பதால் உம்மை இப்போது விட்டு வைக்கிறேன்! உமக்கு நான் இருபத்து நாலு மணிநேரம் அவகாசம் தருகிறேன். பிறகு நான் இவர்களுடன் மறுபடியும் வருவேன். அப்போது இந்தச் சுமுகமான சூழ்நிலை இருக்காது என்பது நினைவிருக்கட்டும்!. நான் வருகிறேன்!..
டேவிட், ஜப்பானிய வீரர்களுடன் ஜீப்பில் ஏறிப் புறப்படுகிறான்.
ஞானம் [அச்சத்துடன்]: நான் ஆரம்பத்திலிருந்தே சொன்னேன். இப்போது பார்த்தீர்களா? அந்த டேவிட் சொல்லியதை நினைத்தால் எனக்கு உடம்பெல்லாம் நடுங்குகிறது.
அந்தோணி: அவருக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஓரிரு வாரம் அவரைத் தலைமறைவாக இருக்கச் செய்துவிட்டுப் பிறகு அவர் விரும்பும் இடத்திற்கு அனுப்பிவைத்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்… ஆனால், இந்த இரகசியம் அவனுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.
ரீட்டா: அப்பா!.. இப்போதே அவரை எங்கேயாவது அனுப்பிவிடுவதுதான் நல்லது…
அந்தோணி: எங்கே அனுப்புவது? இருபத்து நாலு மணி நேரத்திற்குள் நம்மால் என்ன செய்ய முடியும்?
ஞானம்: நாம் எதையாவது செய்துதானே ஆக வேண்டும்.
அந்தோணி [குழப்பத்துடன்]: கர்த்தரே!.. நான் என்ன செய்வேன்? ஒரு பக்கம் என் குடும்பம். மற்றொரு பக்கம் என்னை நம்பி அடைக்கலம் தேடி வந்தவர். அவரைக் காட்டிக்கொடுத்து என் குடும்பத்தை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைப்பது மனிதத்தன்மையாகுமா? ம்… என்ன செய்வேன்?.. [ஒரு முடிவுடன்.] ஞானம்…
ஞானம்: என்ன?..
அந்தோணி: நான் போய் அவரை வேறு எங்கேயாவது அனுப்ப முடியுமா என்று பார்க்கிறேன். நீங்கள் இருவரும் எச்சரிக்கையாக இருங்கள்… ஆ!... சார்ல்ஸ் அதற்குள் வந்துவிட்டால், அவனை இங்கேயே இருக்கச்சொல்… நான் சீக்கிரம் வந்துவிடப்
பார்க்கிறேன்…
ஞானம்: சரி…
அந்தோணி புறப்படுகிறார். ஞானமும் ரீட்டாவும் அவர் செல்வதைக் கவலையுடன் பார்த்தவாறு நிற்கின்றனர்.
காட்சி: 6
[பின்னோட்டத் தொடர்ச்சி]
வெளியில் சென்ற அந்தோணி, இடைக்கால ஏற்பாடாகத் தம் நண்பரை வேறொரு மறைவிடத்தில் இருக்கச்செய்துவிட்டு இல்லம் திரும்புகிறார். அப்போது, ஜப்பானிய வீரர்களுடன் வந்திருக்கும் டேவிட், ஞானத்திடமும் ரீட்டாவிடமும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பதைத் தொலைவிலிருந்து பார்க்கும் அந்தோணி அதிர்ச்சியடைகிறார்.
அந்தோணி: ஆ!.. கொடுத்த கெடு முடிவதற்குள் வந்துவிட்டானே!
அவர் விரைந்து இல்லத்தை நோக்கி வருகிறார். டேவிட், ஞானத்தையும் ரீட்டாவையும் தொடர்ந்து கேள்விகள் கேட்டு அச்சுறுத்திக்கொண்டிருக்கிறான்.
டேவிட்: நான் மறுபடியும் கேட்கிறேன். உன் அப்பா எங்கே?
ரீட்டா: தெரியாது!..
டேவிட்: அந்த ஆளை வேறு இடத்தில் மறைத்துவைக்கப் போயிருக்காரா?
ரீட்டா: அதெல்லாம் எனக்குத் தெரியாது!
டேவிட்: ஒரு நாள் உன்னைத் தொட்டதற்காக நீ என்மீது எச்சிலை உமிழ்ந்தாயே, இப்போது என்ன செய்வாய்? ம்?..
ஞானம்: என் கணவர் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. பிறகு அவர் எங்கே போனார் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?
டேவிட் [சினம் பொங்க]: அந்தோணி போயிருக்கும் இடத்தைச் சொல்லப்போகிறீர்களா இல்லையா?
அந்தோணி [வந்துகொண்டே]: அவர்களை ஏன் மிரட்டுகிறாய்? என்னைக் கேள்! என்ன தெரிய வேண்டும் உனக்கு?
டேவிட்: அந்த ஆள் எங்கே?
அந்தோணி: அவர் இந்தப் பகுதியில் இப்போது இல்லை.
டேவிட்: அப்படியென்றால், இங்கே முன்பு இருந்தாரா? அந்த ஆளை வேறு இடத்திற்கு மாற்றத்தான் நீர் போயிருந்தீரா?
அந்தோணி [வெறுப்புடன்]: நான் உனக்கு எதையும் சொல்லத் தேவையில்லை!
டேவிட் [கடுஞ்சினத்துடன்]: ஓ! எதுவும் சொல்லத் தேவையில்லையா? [வீரர்களை நோக்கி.] இவர்கள் இருவரையும் சுட்டுத் தள்ளுங்கள்! அவளை இழுத்து வாருங்கள்!
டேவிட் கட்டளையிட்டதும் ஜப்பானிய வீரர்கள் உடனே அந்தோணியையும் அவர் மனைவி ஞானத்தையும் சுட்டுவிட்டு ரீட்டாவைப் பிடித்து இழுக்கின்றனர்.
ரீட்டா [கதறியழுது]: என்னை விட்டுவிடுங்கள்!.. என்னை விட்டுவிடுங்கள்!.. அம்மா!.. அப்பா! …அம்மா!.. அப்பா!..
அவள் புலம்பலைப் பொருட்படுத்தாமல் வீரர்கள் அவளை இழுத்துச்செல்கின்றனர்.
ஞானம்: ரீட்… டா!.. ம… களே!..
அந்தோணி: அட… பா…வி…களே… அடைக்கலம்… கொடுத்து ஓர்…உயிரைக் காப்பாற்றியதற்காகவா இரண்டு உயிர்களைப் பறித்தீர்கள்?.. பாவம் செய்த… உங்களைக் கர்த்தர்… மன்… னிக்… கட்டும்… கர்த்… தர்…
கொலையுண்டு கிடக்கும் தன் பெற்றோரைப் பார்த்துக் கதறியழும் ரீட்டாவை ஏற்றிக்கொண்டு ஜீப் வண்டி புறப்படுகிறது.
காட்சி: 7
[பின்னோட்டத் தொடர்ச்சி]
டேவிட் தன் இல்லத்தின் கூடத்தில் சாராயம் அருந்திக்கொண்டிருக்கிறான். வெளியில் இடி, மின்னலுடன் கடுமையான மழை பெய்யத் தொடங்குகிறது. பலத்த காற்றினால் சன்னல்கள் படீர்படீரென்று அடித்துக்கொள்கின்றன.
டேவிட்: ம்… என்ன இது?.. இடி, மின்னல், காற்று, மழை எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து வந்துவிட்டன!... [திடீரென்று ஓர் உருவம் சன்னல் வழியாக வீட்டிற்குள் குதிப்பதைக் கண்டு டேவிட் திடுக்கிடுகிறான்.] ஆ!..யார் நீ? யார் நீ?...
சார்ல்ஸ் மெதுவாகக் கூடத்திற்குள் வருகிறான்.
சார்ல்ஸ்: படைபலத்தைக் கொண்டு என்னைப் பெற்றவர்களின் உயிரைக் குடித்துவிட்டாய். இப்போது நான் உன் உயிரை முடிக்க வந்திருக்கிறேன்….
டேவிட் [திடுக்கிட்டு]: நீ… நீ… சார்ல்ஸ்…
சார்ல்ஸ்: ஆமாம்! சார்ல்ஸ்தான்! என் தங்கை எங்கே?
டேவிட்: எனக்குத் தெரியாது!
சார்ல்ஸ்: தெரியாதா? மீண்டும் கேட்கிறேன். ரீட்டா எங்கே?
டேவிட்: எனக்கிருக்கும் செல்வாக்கை அறியாமல் என் வீட்டுக்குள் வந்து என்னையே மிரட்டுகிறாயா?
சார்ல்ஸ் [கொதித்து]: விலங்குக் குணம் படைத்தவனே! உன�
�னைச் சுற்றிப் பார்! இங்கே உனக்குத் துணையாக உன் ஜப்பானியப் படைகள் இல்லை! இங்கே நீயும் நானும்தான்!.. என் தங்கையை நீதான் ஜீப் வண்டியில் ஏற்றிப் போனாய் என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். என்னிடம் உதை வாங்காமல் உண்மையைச் சொல்!
டேவிட்: நான்… நான் அவளைக் கொண்டுவரவில்லை. ஜப்பானியர்கள்தான் அழைத்துப்போனார்கள்…
சார்ல்ஸ்: ஜப்பானியர்களா அழைத்துப் போனார்கள்? [குமுறி] ஜப்பானியர்களா அழைத்துப் போனார்கள்?
சார்ல்ஸ்,டேவிட்டின் முகத்தில் மாறிமாறிக் குத்துகிறான். அலறும் அவன் முகத்தில் குருதி கொட்டுகிறது.
டேவிட் [கெஞ்சி]: சார்ல்ஸ்… சார்ல்ஸ்… அடிக்காதே!.. சொல்லிவிடுகிறேன்...
சார்ல்ஸ்: சொல்!
டேவிட்: அவள்… அவள்… தற்கொலை செய்துகொண்டாள்…
சார்ல்ஸ் [அதிர்ச்சியால் துடித்து]: என்ன? தற்கொலையா? என் தங்கை தற்கொலையா செய்துகொண்டாள்? ரீட்டா தற்கொலையா செய்துகொண்டாள்? ஏன்? [கத்தி] ஏன் தற்கொலை செய்துகொண்டாள்?