by Gwee Li Sui
எதுவும் வேண்டாதவர்கள் துர்க்காவோடு மூன்றாம் மாடியின் ‘வியூயிங் கேலரி’ க்குச் சென்றார்கள். ‘ஃபைகாண்டினென்ட்ஸ்’ உணவகத்திற்கு அருகேயிருக்கும் கண்ணாடிச் சாளரத்துக்கு எதிரே துர்க்கா நின்றாள். மேலே இருட்டு வானம். கீழே அரைவட்டத்தில் பெரிமீட்டர் என்ற வீதியின் மஞ்சள் நிறச் சாலை விளக்குகள். அவற்றுக்கு முன்னே விமான ஓடுபாதைக்கு ஒளியூட்டும் நீல வண்ணச் ‘சிக்னல்’ விளக்குகள்.
உண்டு முடித்தவர்கள் மின்நகர்த்திவழிப் பார்வையாளர் கூடத்திற்குச் சென்றனர். இரவு பத்தரைக்கு வலப்பக்க ஆகாயப் பகுதியில், வெண்ணிற ‘ஹெட்லைட்ஸ்’ கண்களாய் ஒளிர, ‘டெய்ல் லேம்ப்’ சிவப்பாய் விழி சிமிட்ட, ஒரு பெரிய திமிங்கிலம்போல இலண்டன் விமானம் சரிவாய்க் கீழே இறங்கியது. அது தரையைத் தொட்டதும், முன் ‘டயர்’ அருகே ‘பளீர்’ என ஒரு தீப்பொறி. இறக்கை ஒன்றிலே நெருப்புப் பிழம்பு. ஒலி பெருக்கி அலறிற்று: “ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரேடார் ரூம் அனௌன்சஸ் - ஆர் ஜே ட்வெண்டி டூ ஆன் ஃபையர்! நோ ஒன் ஷுட் பேனிக்! இமிடியட் ஏக்ஷன் டேக்கன்!”
‘கண கண’ என்ற ஒலியுடன், ‘ஏர்போர்ட்’ டின் இரு தீயணைப்பு நிலையங்களிலிருந்தும், வாகனங்கள் விரைவாய் வந்தன. தீயணைப்பு வீரர்கள் தத்தம் பிரிவுத் தலைவர்களின் கட்டளைக்கு ஏற்ப, உடனுக்குடன் செயலாற்றினர். வானில் நீண்டிருந்த அக்கினியின் பொன்நாக்கு சிறிது நேரத்தில் துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விமானத்தைச்சுற்றி ஒரே புகைமண்டலம்.
“ஓ, மை டாட்டர்!” எனக் கூவி, நரசம்மாளின் தோளிலே சாய்ந்தாள் துர்க்கா..
***
“யு ஆர் வெரி லக்கி, மேடம் துர்க்கா. இன்னும் பலபேரு தம் காயங்களுக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கையில், கொஞ்சம் புண்களோடு உடல்தேறி உங்க மகளும் அவ ‘பாய் பிரண்ட் ‘டும் இன்னைக்கு ‘டிஸ்சார்ஜ்’ ஆவறாங்க,” என்று மருத்துவமனை டாக்டர் கூறியபோது, துர்க்காவுக்கு ஏற்பட்ட ஆனந்தம்.
“மத்த தீயணைப்பு வீரர்களுடன் பிரிவுத் தலைவனான உன் மகன் சாரதியும் சேர்ந்துதான், நெருப்புப்பிடித்த விமானத்திலிருந்து எல்லாரையும் காப்பாத்தினாங்க!” என்று கருணாநிதி உரைத்தபோது, துர்க்காவுக்கு உண்டான வியப்பு.
“நீங்க ஒதுக்கிவைச்ச சாரதி தம்பிதானே கடைசியில பிரசன்னாவையும் சுரேஷையும் காப்பாற்ற வந்திருக்கு. எதிர்பாராம பிரசன்னாவுக்கு ஏதாச்சும் ஆயிருந்தா?” என்று நரசம்மாள் சொன்னபோது, துர்க்காவுக்கு நேர்ந்த குழப்பம்.
பல உணர்வுகளுடன் கடந்த சில நாட்களாக அலைமோதிக்கொண்டிருந்தாள் துர்க்கா…
‘பிரசன்னாவுக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா?’ என்ற நரசம்மாவின் வினா அவளைப் பூதாகரமாய் உலுக்கியது. பிரசன்னா இல்லாத வாழ்க்கையை அவளால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. பிரசன்னாவை உயிர்பிழைக்க வைத்தோரில் சாரதி முக்கியமானவன். அவனை ஒத்த தீயணைப்பாளர்கள் இல்லாவிட்டால், பயணம் செய்த பிரசன்னா, சுரேஷ் முதலியோர் உயிர்தப்பி இருக்கமுடியுமா? ‘புளு காலர் ஜாப்’ புரியும் அவர்கள் முதன்முதலாகத் துர்க்காவின் உள்ளத்தை எங்கோ ஒரு மூலையில் தொட்டு வருடலாயினர். அப்படி என்றால் இதுகாறும் அவள் உள்ளத்தை நிரப்பிவந்தவர்கள் யார்? சந்தேகம் இல்லாமல் வசதி படைத்த மனிதர்கள்தான். அதனால் அல்லவா, தாலி கட்டிய கணவரும், வயிற்றில் உதித்த மகனும் அவள் இதயத்தில் குடிபுக இயலாமல் போயினர். பெருஞ்செல்வர் சீனிவாசனுக்கு மகளாய் அவதரித்த துர்க்கா, மேல்மட்டத்தினரோடு பழகுவதுதான் தனக்குப் பெருமை என்று கருதியதாலேயே, மாதவனோடு அவள் என்றும் மனம்விட்டுப் பேசியதில்லை. பொருளியல் சூனியத்திலிருந்து வந்த அவர், தன் தந்தையால் உயர்த்தப்பட்டவர் எனத் தாழ்வாக எண்ணியதாலேயே அவள் அவரை உதாசீனப்படுத்தினாள். செல்வமிகு குடும்பத்திலிருந்து மாதவன் வந்திருந்தால், அவ்வாறு அவள் செய்யத் துணிவாளா? கல்வியில் உயராமல், சாமான்யங்களோடு பழகிய குற்றத்தால்தானே சாரதியையும் துர்க்கா அலட்சியப்படுத்தினாள். அவன் ஓடியபிறகு, அவள் கொஞ்சமும் கவலைப்படவில்லையே. சாரதிக்குப் புகலிடம் தந்த கருணாநிதி அவ்வப
்போது அவனைப்பற்றித் தொலைபேசியிலும் நேரிலும் விவரங்கள் தந்தபோது, எத்தனை வன்மை உள்ளத்துடன் அவற்றை அவள் புறக்கணித்திருக்கிறாள். “தேசிய சேவை முடிந்து, தீயணைப்பு நிலையம் ஒன்றில் சாரதி சேர்ந்துள்ளான்,” என்று தெரிவிக்கப்பட்டபோதுகூட, அந்த வேலை தன் குடும்ப ‘டிக்னிட்டி’ க்கு இழுக்கு என்றுதானே அவள் நினைத்தாள். காரில் வெளியே செல்லும்போது, “அதோ சாரதி தம்பி போகுது ! இதோ இங்கே சாரதி தம்பி நிக்குது!” என்று நரசம்மாள் பல சமயங்களில் காட்டியபோதெல்லாம் முகம் திருப்பாத துர்க்காவின் இதயத்தில் பாசம் எழாமல் போனதற்குக் காரணம் என்ன? பாசம் இல்லாதவளா அவள்? பிரசன்னாமீது அளவுக்கு மீறி அதைக் கொட்டி வருகிறாளே. அப்படியானால் தாய்ப்பாசத்தை அவள் பேதம் காட்டித்தானே வழங்கியிருக்கிறாள். தான் கிழித்த கோட்டை மீறாத பிரசன்னாவின்மேல் அவள் பெருவிருப்பம் கொண்டிருந்தாள். அப்படி நடக்காத சாரதி, அவள் உள்ளத்தில் ஓர் ‘அனானிமஸ் டிஜிட்’டாய் ஒதுக்கப்பட்டான்.
கடந்த சில தினங்களாய்த் துர்க்கா தன் மனத்திற்குள் இவ்வாறு வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோது, மேலும் சில உண்மைகள் அவளுக்குப் புலப்பட்டன. அவள் மனிதர்களைப் பொதுவாக இரு பெரும்பிரிவுகளாய்ப் பிரித்தே பார்த்திருக்கிறாள்; பழகியிருக்கிறாள்; மதிப்பு வைத்திருக்கிறாள். மேல் வர்க்கம், கீழ் வர்க்கம் என்ற அந்த இரண்டு பிரிவுகளும் பணத்தை, பட்டத்தை, பதவியை அடிப்படையாகக்கொண்டு எழுந்தவை. இத்தனை காலம் அவளை வன்மையாக ஆட்டிப் படைத்தது, பொருளியல் வர்க்கபேதம்தான். ‘அதனுடைய மாயப்பிடியில்தான், எளிமை உருக்கொண்ட என் கணவரையும், சாதாரண நிலையை எட்டிய என் மகனையும் துச்சமாக மதித்தேன்,’ என்று எண்ணிய தறுவாயில், தன் சிறுவயதில் படித்த ஒரு திருக்குறள் அவள் நினைவுக்கு வந்தது. ‘உருவு கண்டு எள்ளமை வேண்டும்…’ எனத் தொடங்கும் அந்தப் பொய்யாமொழிக்கு அன்றைய அவள் தமிழாசிரியர் சொன்ன பொருள் வேறு. தற்போதைய சிந்தனையில் அந்த ஈரடிகள் அவளுக்குச் சொன்ன புது அர்த்தம் வேறு. ‘ஏழைப் பின்னணியிலிருந்து வந்தார் மாதவன், வசதி குன்றியவர்களோடு பழகினான் சாரதி என்ற நோக்கில், அவர்களுக்கு வர்க்க உரு, உருவகங்கள் கொடுத்து, சதா அவர்களைத் தான் எள்ளாமல் இருந்திருக்க வேண்டும்,’ என்ற புதுப் பொருளையே அக்குறள் வரிகள் அவளுக்கு உணர்த்தின. ‘மேல்மட்ட என் அப்பா உருவாக்கிய ‘ஆடிட்டிங் கம்பெனி‘ என்ற ஒரு பெருந்தேரை உருட்டிச் சென்றவர் எளிய பழக்கங்களைக் கொண்ட என்னவர்தான். பிரசன்னா போன்ற வசதிபடைத்தோர் பயணம் செய்த விமானம் விபத்துக்கு உள்ளானபோது, அவங்கள காப்பாற்றியவர்கள் தேரின் அச்சாணியாய் விளங்கிய சாரதிபோன்ற தீயணைப்பு வீரர்கள்தான். மனிதர்கள கீழ்வர்க்கம் எனப் பிரித்து, அவர்களின் உருவு கண்டு இனி நான் இகழாதிருக்க வேண்டும். ஏனென்றால், உருண்டோடும் தேருக்கு அச்சாணி போன்றோர் அந்த வர்க்கத்திலும் இருக்காங்க.’
இந்தப் புதிய விழிப்பில் சாரதியின் சாதாரணமான இறந்தகால உருவம் மறைந்து, புனிதமாய்ப் பேருரு எடுத்தது. “ஓ, மை சன்!” என்று துர்க்காவின் உதடுகள் உச்சரித்தன.
***
மறுநாள்.
“உன்னையும் பிரசன்னாவையும் பார்க்கச் சாரதி விரும்புகிறான். அவன அங்கே நான் அழைத்து வரப்போறேன். இதுதான் என்னோட கடைசி முயற்சி. இப்பவும் ஏதாச்சும் சொல்லித் தட்டிக்கழிக்காதே,” என்று கூறி, ‘டக்’ எனத் தொலைபேசியை வைத்தார் கருணாநிதி.
அடுத்த ஒரு மணி நேரத்தில், வாசல் மணி ஒலித்தது. கதவைத் திறந்த நரசம்மாள் மகிழ்ச்சி பொங்க, “வாங்க! வாங்க!” என்று வரவேற்று, “அம்மா, யார் வந்திருக்கா பாருங்க!” என்று கூவினாள். அங்கே வந்த பிரசன்னாவின் முகத்திலும் பிடிபடாத ஆனந்த ரேகை ஓடியது.
கூடத்தில் அமர்ந்திருந்த துர்க்கா எழுந்தாள். அவள் எதிரே வெள்ளை அரைக் கைச்சட்டை, வெள்ளை முழுக் காற்சட்டை, இடுப்பில் கறுப்பு ‘பெல்ட்’ அணிந்து நெடிய தோற்றத்துடன் சாரதி நின்றுகொண்டிருந்தான். அசப்பில் தன் கணவர் மாதவனே உயிர்பெற்று வந்தாற்போலிருந்தது துர்க்காவுக்கு.
கருணாநிதி ஏதோ சொல
்ல வாயெடுப்பதற்குமுன், தன் இரு கரங்களையும் நீட்டி, “சாரதி கண்ணு!” என்று அழைத்தாள் துர்க்கா. அவள் மனமாற்றத்தை அறியாத கருணாநிதி, நரசம்மாள், பிரசன்னா, சுரேஷ் முதலியோர் விழித்தனர்.
அந்த அழைப்பிற்காகவே ஏங்கியிருந்த சாரதி இரண்டு எட்டில் தாவித் துர்க்காவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவனை இறுக அணைத்தவாறு துர்க்கா ‘சோபா’வில் சரிந்தாள். மறுவிநாடி சாரதி அவள் மடியில் புதைந்து சேயானான்.