by Gwee Li Sui
“என்ன பேசாம இருக்கிறீங்க? எங்க அப்பாவோட இன்னொரு பங்களா வீடு வீராகுக் குளோஸ்லே இருக்குதில்லே, சாரதியின் நலனுக்காக அங்கே நாம குடிபோயிடலாம்,” என்றாள் துர்க்கா.
மௌனம் கலைந்த மாதவன், “அங்கே போனாமட்டும் பிரச்சினை முடிஞ்சுடும்னு நினைக்கிறியா? அந்த இடத்துக்கு அருகில் இருக்கிற ஆசூக் ‘கம்பத்’துப் பிள்ளைகளோட அவன் போய்ப் பழகமாட்டான்னு என்ன நிச்சயம்?” என்றார்.
இதைக் கேட்ட துர்க்கா அதிர்ந்தாள்; எரிமலையாய்ப் பொங்கினாள். “ஓ, மை காட்! உங்களப் போன்றவன்தானே உங்கப் பிள்ளையும்? எனக்குன்னு உங்களைத் தேடிப்பிடிச்சு என் தலையிலே கட்டிவைச்சாரே எங்க அப்பா, அவரைச் சொல்லணும்!”
***
பிரசன்னா சுரேஷோடு சிங்கைக்கு வரும் நாள். இரவு ஏழு மணி. துர்க்கா பரபரத்தாள். “போயும் போயும் இன்னைக்குத்தானா ‘கேஸ்ட்ரிக்’ வலி காரோட்டிக்கு வரணும்? நானே ‘ஏர்போர்ட்’ க்கு ‘டிரைவ்’ பண்ணவேண்டியதுதான்!”
“நீங்க இருக்கிற பதட்டத்திலே வண்டிய எடுக்காதீங்கம்மா. நான் பார்த்துக்கிறேன்,” என்றாள் நரசம்மாள்.
ரோச்சோர் வீதியில் ‘பென்ஸ்’ ஓடிக்கொண்டிருந்தது. ‘ஏர் கண்டிஷனர்’ வேலை நிறுத்தம் செய்துவிட்டதனால், காரின் கதவுக் கண்ணாடிகள் காற்றுக்காக இறக்கப்பட்டிருந்தன. அன்று அமாவாசை. சாலை ஓரத்திலே சீன முதுமைப் பெண்டிர் பலர், மஞ்சள் நிறப் ‘பண’த்தாள்களைக் கட்டுக்கட்டாகக் கொளுத்திக்கொண்டிருந்தனர். பாரம்பரிய நம்பிக்கையின் சின்னமாக அங்கங்கே எரிக்குவியல்கள்.
ஓரிடத்தில் சாலை விளக்கு செந்நிறமானது. கார் நின்றது. ஓட்டும் இருக்கையில் வீற்றிருந்த நரசம்மாள் “இன்று பிரசன்னா அப்பாவின் பத்தாவது இறந்த தினம்,” என்றாள்.
“இன்றா? அடுத்த வாரம் வியாழன்னு கோயில் ஐயர் சொன்னாரே!”
“திதிப்படி அப்படிச் சொல்லியிருக்காரு, ஆங்கிலத் தேதிப்படி அவர் நம்மைப் பிரிஞ்சது இன்னைக்குத்தான். நீங்க மறந்துபோனவங்கள நான் ஞாபகப்படுத்தலே. ஐயர் சொன்னது என் நினைவுக்கு வந்துச்சும்மா!”
போக்குவரவு விளக்குப் பச்சையானது. பக்கத்து ஓர் எரிக்குவியலிலிருந்து கரித்தூசு ஒன்று பறந்துவந்து, துர்க்காவின் கண்ணில்பட்டு நீர்துளிக்கவைத்தது. உந்து முன்னே நகர, துர்க்காவின் எண்ணம் மாதவனைச் சுற்றிப் பின்னே தாவியது.
***
“துர்க்கா, ஆண்வாரிசு இல்லாத எனக்கு எல்லாமே நீதான். நான் பாடுபட்டு உருவாக்கிய நிறுவனத்த எனக்குப் பின்னாடி பார்த்துக்கொள்ளப் பொறுப்புள்ள ஒருத்தரு தேவை. அதேமாதிரி உன் வாழ்க்கைக்கு உறுதுணையா கணவரும் வேண்டுமம்மா. அதனால நம்ம ‘கம்பெனி’யில வேலைபார்க்கும் மாதவனை உனக்குத் திருமணம் செய்யலாம்னு நினைக்கிறேன்,” என்றார் ’ஆடிட்டர்’ சீனிவாசன்.
செல்லம் அதிகம் கொடுத்து வளர்க்கப்பட்ட துர்க்கா ‘சீனியர்’ வரை படித்திருந்தாள். சுதந்திரப் பறவையாய்த் திரிந்த அவள் தன் திருமணம் குறித்து அதுவரை யோசிக்கவில்லை. ஆனால், அப்பா சொன்ன மாதவனை அவள் ஒரு தடவை பார்த்தபோது, அவருடைய எடுப்பான உடல்வாகும், சிவந்த மேனியழகும் அவளைக் கல்யாணத்திற்குச் சம்மதிக்கவைத்தன.
பகட்டாய் வாழ்ந்து பழக்கப்பட்ட துர்க்காவுக்கு மாதவனின் எளிமைப் போக்கும், பந்தா இல்லாத தன்மையும் அறவே பிடிக்கவில்லை. மாதவன் பேசுவதும் கொஞ்சம். அப்படிப் பேசினாலும், துர்க்காவுக்குப் பிடிக்காதவகையில் நேரடியாக உண்மையைப் பேசிவிடுவார். அதற்காக அவர் அன்பு இல்லாதவர் என்று சொல்லமுடியாது. துர்க்காவைப்போன்று வெளிப்படையாய் அவர் அதனைக் காட்டுவதில்லை. சாரதி, பிரசன்னா பிறந்த பிறகும், மாதவனின் ஆரவாரமற்ற குணத்தில் மாறுதல் இல்லை. அதேபோல் துர்க்காவின் ஓசைமிக்க சுபாவத்திலும் வித்தியாசம் இல்லை. இருவரும் நேர்க்கோடுகளாய் வாழ்ந்தனர்.
தாம் எதிர்பார்த்தபடி, ‘வாசன் ஆடிட்டிங் கம்பெனி’ யின் நிர்வாகப் பொறுப்பை மாதவன் திறம்படச் செய்தது, சீனிவாசனுக்குத் திருப்திதான். ஆனால், தம் மகளுடன் அவர் அந்நியோன்னியமாய் வாழவில்லையே என்ற குறை அவருக்கு இருந்துவந்தது. நரசம்மாளிடம் அவர் ஒ�
�ு தினம், “நரசு, துர்க்கா பிறப்பதற்கு முன்பே, உன் சின்ன வயசில் என் மனைவியிடம் வந்து அடைக்கலம் புகுந்தவள் நீ. வேலைக்காரச் சிறுமியாய், சமையல்காரப் பெண்ணாய், எங்க குடும்ப விசுவாசியாய், எல்லா நிலையிலும், நீ உன்னதமா இருந்து வர்ற. துர்க்காவவிட வயசில நீ மூத்தவ. அவளுக்கு உற்ற தோழியாய், உடன்பிறவாத அக்காளாய் இருந்து, நீதான் அவளைப் பார்த்துக்கணும். இங்குப் பலர் வேலைக்கு இருந்தாலும், உன்னிடம் இதைச் சொல்றதுக்கு உன்மேலே நான் வைச்சிருக்கிற நம்பிக்கைதான் காரணம்,” என்றார். இருதய நோய் உள்ள சீனிவாசன் அதன்பின்னர் நீண்ட காலம் உயிர் வாழவில்லை. பிரசன்னா பிறந்த மறுவருடமே அவர் காலமானார்.
கட்டுப்பாடு, கடமை உணர்வுமிக்க மாதவன் மாமனாரின் நிறுவனம் தம் கைக்கு நேரடியாக வந்த பன்னிரண்டு ஆண்டுக் காலத்தில், அதன் மேன்மைக்காகக் கடுமையாய் உழைத்தார். சிங்கப்பூர்க் ‘கம்பெனி’ யோடு, கோலாலம்பூரிலும் ஒரு கிளை திறந்தார். அவர் வீட்டில் இருந்த நேரம் குறைவு. சிங்கைக்கும் மலேசியாவுக்கும் அவர் பயணம் செய்தவாறு இருந்தார். அப்படி ஒருமுறை அவர் மலேசியத் தலைநகருக்குச் சென்றபோது, அவர் ஓட்டிய காரின் ‘ரேடியேட்டர்’ சூடாகி வெடித்து…
துர்க்கா தன் முப்பத்தாறாவது வயதில் விதவை ஆனாள்.
கணவர் இறந்ததில் துக்கம் இருந்தாலும் துர்க்காவின் மனத்தில் மாதவன் போனபிற்பாடு, ஒரு வகை விடுதலை உணர்ச்சியே மேவிநின்றது. தன் மேல்தட்டுத் தோழிகள், உறவினர்களோடு அவள் ‘மூவ்’ பண்ண இன்னும் தாராளமாக ‘டைம்’ கிடைத்தது. குடும்பக்கதை தெரியாத எவரும் அவளைப் பார்த்தால், அவள் துணையை இழந்தவள் என்று கூற இயலாது. அந்த அளவிற்கு அவளுடைய நடை உடை பாவனை அமைந்திருந்தன.
மாதவன் மறைவுக்குப்பின், கோலாலம்பூர்க் கிளையைத் துர்க்கா மூடினாள். சிங்கை நிறுவனத்தின் ‘மேனேஜ்மெண்ட்’ பொறுப்பை மாருதி என்பவரிடம் ஒப்படைத்தாள். மாருதி, சீனிவாசனின் வயதினர்; உறவினரும்கூட. ஓய்வுபெற எண்ணியிருந்த அவரை, அவ்வாறு செய்யவிடாமல் நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிய வைத்தாள் துர்க்கா. உடல் ஆரோக்கியம் கொண்ட மாருதி, துர்க்காவின் குடும்பச்சூழல், சீனிவாசன்மீது தாம் கொண்ட பற்று முதலியவை காரணமாக அதற்கு இணங்கினார்.
அது என்னவோ, குண இயல்பில் பிரசன்னா அம்மா மாதிரியும், சாரதி அப்பா மாதிரியும் வளர்ந்திருந்தனர். கணவர்மீது கொண்ட துர்க்காவின் வெறுப்பு, சாரதிமீது மூர்க்கமான கோபமாய் மாறிற்று.
தன் நெருங்கிய தோழி ஒருத்திக்குச் செய்துவைத்திருந்த ‘வெனிலா கேக்’ கைக் குளிர்பதனப் பெட்டியில் தேடிய துர்க்கா ஏமாற்றம் அடைந்தாள். உயிர்வாழ்வுக்குப் பொருள்விற்பனை செய்யவந்த ஒரு குருடருக்கு அதை எடுத்துச் சாப்பிடத் தந்திருந்தான் சாரதி. அதை அறிந்த துர்க்கா மிகவும் கோபமுற்று, ‘அவன் ரா’டை எடுத்துச் சாரதியின் கையில் சூடுபோட்டாள். மறுநாள் சாரதி காணாமல் போனான்.
சாரதியைத் திரும்பச் சேர்த்துவைக்க நரசம்மாள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், மாதவனின் தூரத்து உறவுக்காரரான கருணாநிதி மேற்கொண்ட பிரயாசைகள் அனைத்தும் துர்க்காவின் முரட்டுப் பிடிவாதத்திற்கு முன்னால் தோல்விகண்டன.
உயர்மட்டங்கள் வாழும் ‘டிஸ்ட்ரிக் நை’ னில் ‘ஸ்பேனிஷ் ஸ்டைல் பங்களா ஹவுஸ்’ ஒன்றில் குடியேறிய பின்னர், தன் முழுக் கவனத்தையும் துர்க்கா, பிரசன்னாவின் பக்கம் திருப்பினாள். இங்குப் ‘பிரியூ’ முடித்தவுடன், அவளைப் பிரிட்டனுக்கு அனுப்பினாள். தாத்தா தோற்றுவித்த ‘கம்பெனி’ யை எதிர்காலத்தில் பெயர்த்தி கட்டிக்காக்க வேண்டும் என்ற குறிக்கோளில் அவளைக் கணக்காயர் துறையில் படிக்கவைத்தாள். அங்குப் பிரசன்னா தன்னோடு படித்த சிங்கை மாணவனான சுரேஷை விரும்பினாள். அவனுடைய புகைப்படத்தைப் பதிவுத் தபாலில் பார்த்த துர்க்கா ‘என் தந்தை சொன்னபடி கழுத்தை நீட்டி, என்னத்தை நான் பெரிசா கண்டேன்? என் மகளாவது அவள் ஆசைப்பட்டவனைச் செய்துகொண்டு இன்பமாய் வாழட்டும்’ என்று எண்ணியவளாய், “பிரசன்னா கண்ணு, “எக்ஸேம் பர்ஸ்ட்! வெடிங் லேட்டர்!” என்று உற்சாகத்துடன் க
டிதம் எழுதினாள்.
***
சாங்கி விமான நிலையம். மாருதியுடன் நிறுவன முக்கியஸ்தர்கள், துர்க்காவின் நெருங்கிய உறவினர்கள், ஆருயிர்ச் சிநேகிதிகள் ஆகியோர், பிரசன்னா சுரேஷை வரவேற்க ‘ஏர்போர்ட்’ டுக்கு வந்திருந்தனர்.
அன்றைய இலண்டன் விமானம் வந்துசேரக் காலம் தாழும் எனத் தெரிவிக்கப்பட்டது. “உங்களுக்கும், இங்கே வராத மத்தவங்களுக்கும் பெரிய விருந்து ஒண்ணு, பின்னாடி காத்திருக்கு. இடைப்பட்ட இந்த நேரத்தில என்னென்ன வேணும்னு கேட்டுச் சாப்பிடுங்க!” என்று உபசரித்தாள் துர்க்கா. “டெரஸ் புஃபேட்டிரியா’வில் மேற்கத்திய உணவுக்கும், உள்ளூர் சாப்பாட்டுக்கும் மாருதி பொறுப்பேற்றார். ’ஸ்வென்சென்’சில் ஐஸ்கிரீம் வகையறா உண்ண விரும்பியோரை நரசம்மாள் வழிநடத்திச் சென்றாள்.