Singathology

Home > Other > Singathology > Page 43
Singathology Page 43

by Gwee Li Sui


  “எல்லாம் இருக்கு! ஆனா, இது எதையும் சீந்திக்கூடப் பார்க்க மாட்டேங்குதே!”

  “ஏன்...?”

  “அது எங்களுக்குத் தெரியலே…!”

  “உங்களுக்கும் தெரியலேயா…?”

  “ஆமா, எங்களுக்கும் தெரியாது…!”

  வந்த கிளி வியப்புற்று மறுபடியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் கிழக்கிளியின் முகத்தைப் பார்த்து, “நீ ஏன் பட்டினி கிடந்தே...?” என்று கேட்டது.

  கிழக்கிளி தலையை ஒரு பக்கம் சாய்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்து விட்டு, “அதை நீ ஏன் கேட்கிறே...?” என்று முகத்தில் அடித்தாற் போல் கேட்டது.

  கூண்டுக்கிளி எதிர்பார்க்கவில்லை. அதற்கு ஏன் கேட்டோம் என்று ஆகிவிட்டது.

  “மன்னித்து விடு…!” என்றும் சொல்லியது.

  “மன்னிக்கிறது இருக்கட்டும்…! நீ ஏன் இங்கே வந்தே…? எதுக்கு வந்தே...? உன் பெயர் என்ன...?”

  “என் பெயர் கூண்டுக்கிளி. இப்படித்தான் என்னைக் கூண்டில் அடைத்து வைத்திருந்த ‘கிறுக்கு’ கூப்பிடும். நான் இங்கே வரணும்னு வரலே…! கண்ணை மூடிக்கிட்டுப் பறந்து வந்து இங்கே விழுந்து விட்டேன்…!” என்றது.

  அது தன்னைக் கூண்டுக்கிளி என்று சொல்லியதும் கிழக்கிளி மனம் இரங்கியது.

  குரலைத் தாழ்த்தி, “எங்கே இருந்து வருறே…?” என்று கேட்டது.

  “ஒரு கிறுக்கு என்னைப் பிடித்துக் கூண்டில் அடைத்து வைத்திருந்துச்சு. அந்த கூண்டில் இருந்துதான் வருகிறேன்…!”

  “அந்தக் கிறுக்கு ஏன் உன்னைப் பிடித்துக் கூண்டில் அடைத்து வைத்தது? நீ அதோட தோட்டந்துரவில் உன்ன சொத்துக்களைச் சூறையாடினாயா...? ”

  “அப்படி ஒண்ணும் இல்லே…! நான் அப்படிப்பட்ட கிளியும் இல்லே…! அது ஒரு பறவை வளர்ப்புப் பைத்தியம்…! அதனால்தான் என்னைப் பிடித்துக் கூண்டில் அடைத்து வைத்திடுச்சு!”

  “அது உன்னைப் பிடித்துக் கூண்டில் அடைக்கிற வரைக்கும் நீ என்ன செய்துக்கிட்டு இருந்தே...? பூப் பறித்துப் புறாவுக்குக் கொடுத்தீயா...? இல்லே தூங்கி விழுந்தாயா...? நீ அந்த அளவுக்கு சோம்பேறியா?”

  “இல்லே…!”

  “சேம்பேறி இல்லேனா அந்தக் கிறுக்கு உன்னைப் பிடிக்க வரும் போது நீ பறந்து போய்விட வேண்டியதுதானே…! அந்தக் கிறுக்கிடம் ஏன் அகப்பட்டே...?”

  கூண்டுக்கிளி சிரித்தது.

  “அப்போது எனக்கு இறகுகள் சரியாக முளைக்கலேயே…! இறகு முளைக்காத என்னால் எப்படி பறந்து போக முடியும்...? குஞ்சாக இருந்தேனே…!”

  “ஓ! அப்படியா...?”

  “ஆமா! அதனால்தான் அந்தக் கிறுக்கு என்னைச் சுளுவாகப் பிடித்துக் கூண்டில் அடைத்து வைத்திடுச்சு! நான் கத்தினேன் கதறினேன்…! தொண்டை கிழியக் கத்தினேன்…! ஆனா, நான் கத்தியது அந்தக் கிறுக்கின் காதில் விழலே. என் நெஞ்சம் பதைபதைக்க என்னைப் பிடித்துக்கொண்டு போய் கூண்டில் அடைச்சிடுச்சு …!”

  கிழக்கிளி மனம் மேலும் இளகியது. அதை மேலும் கீழும் பார்த்தது.

  “ரொம்ப நாள் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தாயோ…?”

  “ஆமா! நீண்ட நாள் சிறு கூண்டுக்குள்தான் அடைபட்டுத்தான் கிடந்தேன்…!”

  “ஒரு கருப்பினப் பறவைகூட நீண்ட நாள் கூண்டுக்குள்தான் அடைபட்டுத்தான் கிடந்துச்சு. அதைப் போல நீயும் அடைபட்டுக் கிடந்திருக்கேனு சொல்லு…!”

  “அந்தக் கருப்பினப் பறவை ‘கொள்ளாமை’யைக் கடைப்பிடித்த ஒரு பறவையின் வழியைப் பின்பற்றி, தம் இன விடுதலைக்காக நீண்ட நாள் அடைபட்டுக் கிடந்துச்சு…! ஆனா, நான் அப்படி இல்லே…! ஒரு பறவைக் கிறுக்கின் அற்ப ஆசைக்காக அடிமைக்கப்பட்டுக் கிடந்தேன்…!”

  “நேரம் பார்த்து அந்தக் கூண்டில் இருந்து தப்பித்து இருக்கலாமே…!”

  “அதுதானே முடியாது…! அந்தக் கிறுக்கு என் இறகுகளை வளர விடாது…! வளரவளர வெட்டிவிடும்! அப்படி வெட்டிவிட்ட பிறகும் அடிக்கடி கூண்டைத் திறந்து வைக்காது! எப்போதாகிலும் திறந்து வைக்கும்…! அப்படித் திறந்து வைத்தாலும் அதுக்குப் பயம் வந்துவிடும்…! ‘பறந்து போய்விடுவேன்’னு நினைத்து என்னைப் பிடித்து அதோட சுட்டு விரலில் குந்த வைத்துக்கொள்ளும்…! அதுவும் சும்மா குந்த வைத்துக் கொள்ளாது…! என்னைக் கொஞ்ச�
��யபடி என் கால் விரல்களை அதோட கைக்கட்டை விரலால் அழுத்திப் பிடித்துக்கொண்டுதான் குந்த வைத்துக்கொள்ளும்…! இப்படி இருக்கும் போது எப்படி தப்பிக்க முடியும்...?” என்ற போது ஓர் இளங்கிளி கருநாவல் கனியைக் கொண்டு வந்து கூண்டுக்கிளியின் வாயில் வைத்தது. கூண்டுக்கிளி அதைத் திறமையாகக் கவ்வி சாறு, ‘சர்’ என்று பீச்சி அடிக்கக் கடித்துச் சுவைத்தது.

  “த்ச்…! அடேயப்பா பழம் இவ்வளவு சுவையாக இருக்கே…! கடித்துச் சப்பியதும் அது தொண்டையை விட்டு வாய்க்குள் இறங்கியதே தெரியலேயே…!” என்றது.

  “இதற்கு முன் நீ இது போன்ற நாவல் பழத்தைத் தின்னது இல்லேயா…?”

  “குஞ்சாக இருந்த போது தின்னாலும் தின்னு இருப்பேன்னு நினைக்கிறேன். நினைவு இல்லே. கூண்டில் இருக்கும் போது நாவல் பழத்தைக் கண்ணால்கூடப் பார்த்தது இல்லே…! அந்தக் கிறுக்கு எப்போதும் எனக்குப் பப்பாளிப் பழமும், பயிற்றங்காயுந்தான் உணவாக் கொடுக்கும்…!” என்று கூண்டுக்கிளி முகத்தைச் சுளித்துக்கொண்டு சொல்லியது.

  “நெல்மணி, கொட்டைகள், பருப்புகள்…?”

  “அப்படினா…?”

  கிழக்கிளி வியப்புற்றது.

  “இப்ப நான் சொன்னவற்றுள் எதுவுமே கிடைக்காதா…?”

  “கிடைக்காது…!”

  “தின்னக்கூடப் பருப்புகள், கொட்டைகள் கொடுக்காத அந்தக் கிறுக்கிடம் இருந்து இப்ப எப்படித் தப்பித்து வந்தே...?”

  கூண்டுக்கிளி மூச்சை உள்ளிழுத்து விட்டபடி சிரித்தது.

  “அதை ஏன் கேட்கிறே...? அந்தக் கிறுக்கு என் இறகுகளைக் கொஞ்ச நாளாக வெட்டிவிடவில்லை...! இறகுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்துச்சு…! நானும், ‘இன்னும் கொஞ்சம் வளரட்டும், காலநேரமும் வரட்டும், இந்தக் கிறுக்குக்கு கடுக்காய் கொடுத்துவிடுவோம்’னு நினைத்துக்கொண்டுதான் இருந்தேன்…!”

  உடனே கிழக்கிளி, “இறகு வளர்ந்ததும் சரியான நேரம் பார்த்துக் கம்பி நீட்டிட்டியா…?” என்று கேட்டது.

  கூண்டுக்கிளி சிரித்தது.

  “அதுதான் இல்லே…!”

  “அப்புறம் எப்படித் தப்பிச்சே…?”

  “ஒரு நாள் அந்தக் கிறுக்கு சிரித்தபடி கூண்டுக்கு அருகில் வந்துச்சு. என்னைப் பார்த்துச் சிரிச்சுச்சு…! ‘ஆகா, இதுக்கு முத்திடுச்சு போலிருக்கு! அதான் சிரித்தபடி வருது’னு நினைச்சேன். இன்னொரு பக்கம், ‘இறகுகளை வெட்டிவிடத்தான் இந்தக் கிறுக்கு வருது போலிருக்கு’னும் அஞ்சினேன். ஆனா, அது இறகுகளை வெட்டிவிட வரலே. கூண்டுக்கு அருகில் வந்ததும் கதவைத் திறந்தது…!” என்ற போது, “நீ உடனே பறந்து வந்திட்டீயா...?” என்று கிழக்கிளி கேட்டது.

  “அதுவும் இல்லே…! அந்தக் கிறுக்கு கதவைத் திறந்து வைத்துக்கொண்டு என்னைப் பார்த்துச்சு. ‘விடுதலை விடுதலை…! இன்று முதல் உனக்கு விடுலை...!’னு பாடியபடி கூண்டுக்குள் கையை விட்டு என்னைப் பிடிச்சுச்சு. என் மூக்கு மேல் அதனுடைய நுனி மூக்கை வைத்து, ‘இனி மேல் இந்தச் செல்லம் இந்தக் கூண்டில் அடைபட்டுக் கிடக்க வேண்டாம்…! பறந்து போ…! போய் உன் இனத்துடன் சேர்ந்து சுதந்திரமா சுத்தித்திரி’னு சொல்லுச்சு …! என்னால் நம்ப முடியலே. ‘இதுக்கு எப்படி மனம் மாறுச்சு’னும் தெரியலே. ‘இனி ஒரு நொடிகூடச் சுணங்கக் கூடாது’னும் தோணுச்சு. பறந்து போகத் துடித்துக்கொண்டிருந்தேன். அது என்னைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்து, ‘பறந்து போ’னு பறக்க விட்டுடுச்சு. நான் ‘தப்பித்தேன் பிழைத்தேன்’னு உடனே மேலெழுந்து பறந்தேன். நீண்ட நாள் பறக்காமல் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்ததால் இறுகிவிட்ட என் உடல் உறுப்புகளும், சதைப் பிடிப்புகளும் இளக்கம் அடைய மறுத்தன. என் உடம்பைத் தூக்கிக்கொண்டு என்னாலேயே பறக்க முடியலே. இருந்தாலும் அலகுகளைக் கடித்துக்கொண்டு பறந்தேன்; தொடர்ந்து பறந்தேன்…! எங்கே பறந்து போவதுனும் தெரியலே. கண்ணை மூடிக்கிட்டுப் பறந்து வந்து இங்கே விழுந்துட்டேன்…!” என்றது.

  எல்லாக் கிளிகளும் வாயைப் பிளந்தபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தன.

  “அந்தக் கிறுக்கே உனக்கு விடுதலை கொடுத்துவிட்டதுனு சொல்லு“…!” என்றது கிழக்கிளி.

  “ஆமா…! அந்தக் கிறுக்கே
எனக்கு விடுதலை கொடுத்துடுச்சு…!” என்று கூண்டுக்கிளி தலையை ஆட்டியது.

  அது சொல்லியதை கிழக்கிளி செவிமடுத்துக்கொண்டு இருந்தாலும் அதன் மனம் அங்கு இல்லை. அது தம் ஊருக்கு விடுதலை கிடைத்ததை எண்ணியபடி இருந்தது. அதே நேரத்தில் கூண்டுக்கிளியையும் கூர்ந்து பார்த்தது.

  “எப்படியோ அந்தக் கிறுக்கு உன்னை விடுதலை செய்துடுச்சு. நீயும் விடுதலை ஆகிவிட்டே…!”

  “ஆமா!”

  “இந்த விடுதலை உனக்கு எப்படி இருக்கு...?” என்று கேட்டது.

  “அதை ஏன் கேட்கிறே...? நம் கிளிமொழியில் அதை சொல்ல வேண்டுமானால் சொற்களே இல்லேனு சொல்லலாம்! அந்த அளவுக்கு என் மனம் இனிக்குது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்…! ‘இப்ப நான் எதுக்கும் அடிமை இல்லே’னு உணர்கிறேன். ‘என்னை நானே ஆளுகிறேன்’ என்கிற தன்னம்பிக்கையும் ஏற்பட்டு இருக்கு. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே’னு பக்கத்து ஊர் முண்டாசுப் பறவை கனவு கண்டுச்சே! அது கண்ட கனவு எனக்குப் பலிச்சிடுச்சு…! அந்தக் கனவை நான் அணுஅணுவாகத் துய்க்கிறேன். ஆடுகிறேன், பள்ளுப் பாடுகிறேன்…!” என்று சொல்லிவிட்டு அது அமர்ந்து இருந்த கொப்பு குலுங்க எழுந்து நின்று ஆடியது.

 

‹ Prev